ம. பொ. சிவஞானம்

விக்கிமேற்கோள் இலிருந்து

ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்தது.

மேற்கோள்கள்[தொகு]

ஆங்கிலம் குறித்து[தொகு]

  • சுமார் 290 கோடி மக்களைக் கொண்ட உலகத்தில், ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் 26 கோடி பேர்தான். ஆங்கிலமல்லாத மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோர் 264கோடியாவர். இந்தக் கணக்கைப் பார்த்த பிறகும், ஆங்கிலத்தை உலக மொழி என்று சொல்வது அறிவுடைமை ஆகுமா? [1]
  • உலகம் என்பது ஒரு திசை மட்டும் தானா? எட்டுத்திசையையும் நான் பார்க்க வேண்டுமானால், ஆங்கில மொழிச்சாளரம் ஒன்று மட்டும் போதுமா? ஒரு வீட்டுக்கு ஒரே ஜன்னல் இருப்பது வழக்கமில்லையே.[2]

தமிழும் சமஸ்கிருதமும்[தொகு]

  • தமிழ் மொழியை எனது தாய்மொழியாகக் கருதுகிறேன், அது என் வாழ்க்கை மொழியாக அமைந்துவிட்டதால். 'இந்தியன்' என்ற முறையிலே, 'இந்து' என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழியாக இருந்து வருகிnறது.[3]
  • மந்திரங்களைக் கொண்ட மொழியாதலால், அதனைத் தேவமொழி என்று சொல்வது வழக்கமாகி விட்டது. இதை, தெய்வபக்தியும் மதப்பற்றும் உடைய இந்துக்கள் மறுத்து வாதிடத் தேவையில்லை.[4]
  • தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மதத்தால் இந்துக்களாக இருப்பார்களானால்... அவர்கள் தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது முறையோ, நெறியோ ஆகாது.[5]

இந்தி குறித்து[தொகு]

  • இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டும் அரசியல் பிரச்சாரத்திலே நான் எல்லை கடந்து உற்சாகம் காட்டினேன்.[6]
  • இந்திய தேசிய ஒருமைப்பாட்டை உண்மையிலேயே விரும்பும் தமிழர் எவரும் இந்தி மொழியில் ஞானம் பெற வேண்டியதின் அவசியத்தை மறுப்பதற்கில்லை.[7]
  • மொழி வேறுபாடுடைய பல்வேறு மாநிலங்களின் மக்கள் பரஸ்பரம் கலந்து பழகி ஒருமைப்பாடு எய்துவதற்கு இந்தி ஒன்றுதான் சிறந்தமொழி என்பதனை என்றுமே நான் மறுத்தது இல்லை.[7]

பெரியாருடனான உறவு குறித்து[தொகு]

  • சமயத்துறையில் நானும் பெரியாரும் சந்திக்க முடியாத இருவேறு துருவங்களாக இருந்தோம். அது காரணமாகவே, அவருடைய வாழ்நாள் முழுவதிலும், அவரோடு எந்த நேரத்திலும், எந்த ஒரு பிரச்சினையிலும் நான் ஒன்றூபட்டுச் செயலாற்ற முடியாதவனாக இருந்து வந்தேன்.[8]

பாரதி, காந்தி குறித்து[தொகு]

  • என்னைச் சிலப்பதிகாரத்துக்கு இழுத்தவர் பாரதியார். அதுபோலவே என்னைக் கீதைக்கு இழுத்தது காந்தியின் ‘அனாசக்தி யோகம’ என்ற புத்தகம். (14-1-1962)[9]

உரையாடல்[தொகு]

  • ஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன். இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில், “ம. பொ. சி. இறுதி உரையாற்றினர்“ என்று போட்டிருந்தார்கள். இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.[10]

கல்வி[தொகு]

  • பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான்.[9]

தாய்மொழி[தொகு]

  • குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருவகை தாய்மார்கள் உண்டு. நினைத்து பால் ஊட்டும் தாய் ஒருவகை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தாய் இன்னொருவகை. தாய்மொழி விஷயத்தில் அழுதப் பிள்ளைக்குப் பால் கிடைக்கும் நிலை இருக்கிறது. அழுதால்தான் பால் கிடைக்கும்.— (17-3-1963)[11]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. "தமிழா ஆங்கிலமா"~மா.பொ.சி பக்கம் 24
  2. "ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை"~மா.பொ.சி பக்கம் 50
  3. "தமிழும் சமஸ்கிருதமும்"~மா.பொ.சி பக்கம் 4
  4. "தமிழும் சமஸ்கிருதமும்"~மா.பொ.சி பக்கம் 17
  5. "தமிழும் சமஸ்கிருதமும்"~மா.பொ.சி பக்கம் 19
  6. "எனது போராட்டம், முதல் பதிப்பு "~மா.பொ.சி பக்கம் 140
  7. 7.0 7.1 "எனது போராட்டம், முதல் பதிப்பு "~மா.பொ.சி பக்கம் 268
  8. "எனது போராட்டம், இரண்டாம் பாகம், இரண்டாவது பதிப்பு "~மா.பொ.சி பக்கம் 791
  9. 9.0 9.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  10. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  11. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ம._பொ._சிவஞானம்&oldid=18548" இலிருந்து மீள்விக்கப்பட்டது